குரு பரம்பரை

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

பெரிய பெருமாள்

பெரிய பிராட்டியார்

விஷ்வக்ஸேனர்

நம்மாழ்வார்

நாதமுனிகள்

உய்யக்கொண்டார்

மணக்கால் நம்பி

ஆளவந்தார்

பெரிய நம்பி

ராமாநுஜர்

எம்பார்

பட்டர்

நஞ்சீயர்

நம்பிள்ளை

வடக்குத் திருவீதிப் பிள்ளை

பிள்ளை லோகாச்சாரியார்

திருவாய்மொழிப் பிள்ளை

மணவாள மாமுனிகள்

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசை ஆழ்வார்

நம்மாழ்வார்

மதுரகவி ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

பெரியாழ்வார்

ஆண்டாள் நாச்சியார்

தொண்டரடிப் பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமங்கையாழ்வார்

இவர்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் ஆவர். முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள.

மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் மற்றொரு ஆழ்வாரான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடையவர்

ஸ்வாமி இராமாநுஜர்

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக , சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும், வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள், தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார். இதனை க் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும், பக்தியும் ஏற்பட்டது. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது. இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து, அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.

யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும் அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் , தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க, இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார். அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார். இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார். அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். இதனை அறிந்து கொண்ட கோவிந்தர், இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக் கொண்டார். அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார். காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து, தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.

பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன், இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு, ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார். ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன் அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது, அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு, அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களையும் கூறினர். அவை :-

  • ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.
  • ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.
  • வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப் பட வேண்டும்.

ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க, உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பெரிய திருமலை நம்பியிடம் (அவரின் மாமாவும் ஆவார்) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம், திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் (இவர் ஆளவந்தாரின் பேரன்) அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை, திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள், அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம். திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார். ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட, அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் , மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி, இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.

இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும், தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார். இது போலவே பிறிதொரு சமயம், பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார். இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற, பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். இவர்களை காணாது தவித்த இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால் மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.

தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில் திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு, காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார். அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர். இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.

ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் , சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள், பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார். அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க , உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன் இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார். அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.

திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு, பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர வேண்டி, இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார். ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் – இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது. தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும், மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும், தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால் அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார். திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும் திருக்கோயிலுக்கு திரண்டு வரச் சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.

இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு நரகம் தான் கிடைக்குமேகுமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம் அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள் என்றும், இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர் சீடனாக அமைந்தது கண்டு மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார். ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும், மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்றுவாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இச் சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம் கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக்கொண்டு அரசவை செல்ல, இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார். அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். பின்னர் தில்லி சுல்தானின் மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார். சுல்தானால் களவாடப்பட்ட பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி, உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே வாரும் செல்வப் பிள்ளாய் என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர, அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். அன்று முதல் இராமப் பிரியன் செல்வப் பிள்ளை என்றே அழைக்கப்படலானார். மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.

இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார். இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.

இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார். குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது- ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும், கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

இறைவனின் பெருமையை நயமுற அழகாக - செவிக்கு இனிமையாகப் பாடுவதால் திவ்வியப்பிரபந்தம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் - அன்பில் - அருளில் - தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். ஆழ்வார்கள் என்பது காரணப் பெயராகவும் அவர்கள் தொழிலால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி அருளியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களை ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும் வழங்குவர்.

நாலாயிரம் + திவ்வியம் + பிரபந்தம்


நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். திவ்வியம் என்பது இறைவனைப் பற்றியது, அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது எனப் பொருளின் தன்மை கருதி இனிமை என்னும் பொருளைத் தரும்.

பிரபந்தம் என்பது தொகுப்பு என்றும், தனி நூல் என்றும் பொருள் தரும். தமிழில் பிரபந்தம் என்பதை இரண்டு பொருளிலும் பயன்படுத்தி உள்ளனர். எனவே திவ்வியப்பிரபந்தம் என்பதை,

(அ) தெய்வத்தைப் பற்றிய அல்லது தெய்வீக நூல்களின் தொகுப்பு.

(ஆ) தெய்வத்தைப் பற்றிய நூல் அல்லது தெய்வீக நூல் என்றும் பொருள் கொள்ளலாம்.

பிரபந்தங்கள் என்ற சொல்லைச் சிற்றிலக்கியம் என்னும் பொருளில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு சிற்றிலக்கியத்தையும் ஒரு தனி நூலாகக் கொண்டனர். (காட்டாக, உலாப் பிரபந்தம்) எனவே தான் சிற்றிலக்கியங்களின் வகையை 96 வகைப் பிரபந்தம் என்று அழைத்தனர்.

ஆக, பிரபந்தம் என்னும் சொல் தொகுப்பு, தனி நூல், சிற்றிலக்கியம் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதைத் தமிழ் இலக்கிய வரலாறு காட்டுகின்றது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இயக்கக் காலமாகும். வைதிக மதத்தை மன்னர்கள் போற்றத் தலைப்பட்டனர். வைதிக மதம் என்பது சைவ வைணவ மதங்களாகும். சோழன் இராசராசன், நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளைத் தொகுத்துத் தந்தான். அது போலவே வைணவப் பாசுரங்களை 10-ஆம் நூற்றாண்டில் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்னும் பெயரில் நாதமுனிகள் தொகுத்து அருளினார்.

புறச் சமயத் தாக்குதல்களில் இருந்து விடுபட்ட சைவ வைணவம் சார்ந்த வைதிக சமயத்தார் தத்தம் கடவுளர்கள் தாம் முழுமுதல் கடவுள் என நிறுவத் தலைப்பட்டனர். இதன் விளைவு பயன் உரைக்கும் பாசுரங்கள் முகிழ்த்தன.

திவ்வியப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் அமைந்த இறுதிப் பாடல்கள் இதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன.

திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்களில் சமணம், பௌத்தம் போன்ற மதம் சார்ந்தவர்களைப் பழிக்கும் அடிகளும் இடம் பெற்றன.

பின் வந்தோர் திருமால் அவதாரத்தைக் காப்பிய நாயகனாகக் கொண்டு காப்பியங்களும் பிற சிற்றிலக்கிய வகை சார்ந்த நூல்களும் இயற்ற நாலாயிரத்தின் செல்வாக்கே காரணம் எனலாம்.

ஆழ்வார்களின் அருளிச் செயல்களை நாதமுனிகள்

  • முதலாயிரம்
  • திருமொழி
  • திருவாய்மொழி
  • இயற்பா

என நால் வகையாகப் பகுத்துள்ளார். இந்த வகைப்பாடு பற்றி அறிஞர்களிடையே பல கருத்துகள் உண்டு.

ஆழ்வாரும் பாசுரங்களும்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை தெளிவிற்காகக் கீழே கொடுக்கப்படுகின்றது.

1 பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி 100
2 பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 100
3 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 100
4 திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 100
திருச்சந்த விருத்தம் 120
5 நம்மாழ்வார் திருவிருத்தம் 100
திருவாசிரியம் 8
பெரிய திருவந்தாதி 87
திருவாய்மொழி 1102
6 மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண்சிறுத்தாம்பு 11
7 குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி 105
8 பெரியாழ்வார் திருப்பல்லாண்டு 12
பெரியாழ்வார் திருமொழி 461
9 ஆண்டாள் திருப்பாவை 30
நாச்சியார் திருமொழி 143
10 தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி 10
திருமாலை 45
11 திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் 10
12 திருமங்கை ஆழ்வார் திருவெழுக்கூற்றிருக்கை 47
சிறிய திருமடல் 155
பெரிய திருமடல் 297
திருநெடுந்தாண்டகம் 30
திருக்குறுந் தாண்டகம் 20
பெரிய திருமொழி 1084

மேற்காட்டிய பாசுரங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

எண்ணிக்கை

ஆழ்வார்களின் பாசுரங்கள் 3776. எனவே 224 பாசுரங்கள் குறைவாக இருப்பினும் அவற்றை நாலாயிரம் எனக் கொள்வர்.

ஒரு சிலர் திருவரங்கத்தமுதனார் இயற்றிய பிரபந்த காயத்ரி எனப்படும் இராமானுசரின் வரலாற்றைக் கூறும் இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து 4000 எனக் கணக்கிடுவர்.