நம் ஜீயர் ஸ்வாமிகள் ப்ரதானமாக 2016ஆம் ஆண்டு பீடாரோகனம் செய்தது இந்த திருக்கோயிலுக்கு தான், திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார்.
அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தி தேற்றிய நாரதர், இருவரையும் கண்ணனைக் காண தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார். பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.
இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.
இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடை யாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தின் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார்